

ஊட்டி,
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. 'நீலகிரி மாவட்டத்தின் பழனி’ எனவும் ‘முருகனின் 8-வது படைவீடு’ எனவும் பக்தர்களால் போற்றப்படும் இக்கோவில் பசுஞ்சோலைக்குள் மிகவும் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கிருத்திகை மற்றும் காவடி திருவிழா மிகவும் விசேஷம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1-ந்தேதி நடைபெறும் காவடி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளை ஏந்தி ஊர்வலம் செல்வார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டு அன்னமலை முருகன் கோவிலில் 49-ம் ஆண்டு நிறைவு விழா, பஞ்சலோக உற்சவமூர்த்தி பவனி விழா, உலக நல யாக விழா, மற்றும் 37-ம் ஆண்டு காவடி பெருவிழா இன்று நடைபெற்றது.
நேற்று மாலை 6 மணிக்கு வாஸ்து வழிபாடு, மகா கணபதி வேள்வி, நவகிரக வேள்வியுடன் திருவிழா தொடங்கியது. அதன்பின் கொடியேற்றம், காப்பு கட்டுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான காவடி திருவிழா இன்று காலை அன்னமலை அடிவார விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்களின் இன்னிசை கருவிகள் மற்றும் நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் மேள தாளங்களுடன் காவடி திருவிழா ஊர்வலம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். பால் காவடி, பன்னீர் காவடி, சந்தன காவடி என பல்வேறு வகையான காவடிகளை ஏந்தி ஊர்வலத்தில் அணிவகுத்து வந்தனர். இந்த ஊர்வலம் ஓணிக்கண்டி, கீழ்குந்தா, கொட்டரக்கண்டி, மஞ்சூர், குந்தா கேம்ப், மட்டகண்டி வழியாக பிற்பகல் 3 மணிக்கு கோவிலை வந்தடைந்தது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வழிநெடுகிலும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் ஆடல், பாடலுடன் கொண்டாடினர். காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு ஜூஸ் மற்றும் நீர் மோர் வழங்கி மகிழ்ந்தனர்.