திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி

நிறைமணி காட்சியின் கடைசி நாளில் காய்கறிகளை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி
Published on

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பௌர்ணமி தினத்தில் நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நேற்று கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களை பந்தல் முழுவதும் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. உற்சவர் அம்மனுக்கும் பழங்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலகில் மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும். இயற்கை வளங்கள் பெருக வேண்டும். விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது.

இதற்காக சுமார் 5 டன் எடையுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடக்கும் இந்த நிறைமணி காட்சியின் கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.

நிறைமணி காட்சியையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. பக்தர்கள் நிறைமணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து சென்றனர். நிறை மணி காட்சியானது தொங்கும் காய்கறி, பழத்தோட்டம் போல் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com