

கேரள மக்கள் அனைவரும் சாதி, மத, இன வேறுபாடின்றி, மகிழ்ச்சியோடு கொண்டாடும் பாரம்பரிய திருவிழா ஓணம் பண்டிகை ஆகும். ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கேரளத்தை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தி, அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் மக்களிடம் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். இவர், தனது நாட்டை மிகவும் சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார். இவரது ஆட்சியில் பசி, வறுமை, அநீதி இல்லாமல், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். மகாபலி சக்கரவர்த்தியின் புகழ் மூவுலகிலும் பரவியது. தர்மத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கிய மகாபலி, மூவுலகையும் ஆட்சி செய்ய ஆரம்பித்தார். இதனால், 'தானே அனைவரிலும் சிறந்தவர்' என்ற அகந்தை மகாபலி சக்கரவர்த்திக்கு ஏற்பட்டது.
மகாபலியின் புகழைக் கண்டு தேவர்கள் அனைவரும் பயந்தனர். இதையடுத்து தேவர்கள், மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவ்வேளையில் மகாபலி சக்கரவர்த்தி, தனது குருவான சுக்ராச்சாரியாரின் ஆசியோடு மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினார். யாகம் முடியும்போது, யார் தானம் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி, நாட்டு மக்களுக்கு கேட்கும் தானத்தை வழங்கினார். அச்சமயம் மகாவிஷ்ணு, வாமன (குள்ள வடிவம்) அவதாரம் எடுத்து, யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
வாமனரை பார்த்த மகாபலி சக்கரவர்த்தி, அவரிடம் “என்ன தானம் வேண்டும்" என்று கேட்டார். அதற்கு வாமனர், “அரசே! எனக்கு மூன்று அடி நிலம் மட்டும் போதும்" என்றார். மகாபலி சக்கரவர்த்தி சிரித்துக் கொண்டே, "மூன்று அடி நிலம் தானா?" என்று கேட்டார். அப்போது குறுக்கிட்ட சுக்ராச்சாரியார், “வந்திருப்பவர் சாதாரண சிறுவன் அல்ல. மகாவிஷ்ணுவின் அவதாரமே” என்பதை சக்கரவர்த்திக்கு உணர்ந்தார். எனவே மகாபலியிடம், அவர் கேட்ட தானத்தை வழங்க வேண்டாம் எனவும் கூறினார்.
ஆனால், யாகம் முடியும் தருவாயில் உள்ளதால் மகாபலி சக்கரவர்த்தி தானம் கொடுப்பதை நிறுத்த விரும்பவில்லை. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். வாமனருக்கு மூன்றடி நிலம் கொடுக்க ஒப்புக்கொண்டு உறுதி அளித்தார். உடனே குள்ள வடிவில் இருந்த வாமனர், மிகப் பெரிய உருவம் எடுத்து பூமிக்கும் வானுக்குமாக உயர்ந்து நின்றார்.
பின்னர், தன்னுடைய முதல் அடியில் பூமி முழுவதையும் அளந்தார். இரண்டாவது அடியில் வானத்தை அளந்தார். பின்னர், “மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” எனக் கேட்க, மகாபலி சக்கரவர்த்தி தனது தலையை தாழ்த்தி “எனது தலையில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார். உடனே வாமனர், மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் தனது மூன்றாவது அடியை வைத்தார். இதனால் மகாபலி சக்கரவர்த்தி, பாதாள உலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இருப்பினும், மகாபலி சக்கரவர்த்தியின் நல்ல மனதையும், தான தர்மத்தையும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் பண்பையும் போற்றிய மகாவிஷ்ணு, அவருக்கு வரம் அளிப்பதாக கூறினார். மகாபலி, “என் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை, நான் ஆண்டுக்கு ஒரு முறையாவது வந்து பார்க்க வேண்டும்” என்று கேட்டார். மகாவிஷ்ணுவும் அவரது வேண்டுகோளை ஏற்று வரம் அளித்தார்.
அதன்படி, ஆவணி மாத திருவோண நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தனது மக்களை காண பூமிக்கு வருவதாக கருதப்படுகிறது. இதையே ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் நம்பிக்கையோடு கொண்டாடுகிறார்கள்.
கேரளாவில் ஓணம் பண்டிகை அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாட்களுமே கேரளாவில் கொண்டாட்டம் களைக்கட்டிவிடும். ஓண சத்யா, படகுப் போட்டி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், யானை ஊர்வலம், ஓண ஊஞ்சல் என கேரளம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.
இந்த பண்டிகையின் முக்கிய அம்சமே, மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போடப்படும் அத்தப்பூ கோலம்தான். முதல் நாள் ஒரேவகையான பூக்கள், 2-ம் நாள் இரண்டு வகை பூக்கள், 3-ம் நாள் மூன்று வகை பூக்கள் என தொடர்ந்து 10-வது நாள், 10 வகையான பூக்களால் கோலமிட்டு அழகுபடுத்துவார்கள். 10-ம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவார்கள்.
இயற்கைக்கும், விவசாயத்திற்கும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருவிழாவாகவும் ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வதால், இது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை போற்றும் விழாவாகவே உள்ளது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை, நாளை (ஆகஸ்டு 26) கொண்டாடப்படுகிறது.