பழனி முருகன் கோவிலில் நாளை பிற்பகல் 2 மணிக்கு மேல் தரிசனம் ரத்து

மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.
பழனி முருகன் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில்
பழனி முருகன் கோவில்
Published on: 

பழனி,

பழனி தண்டாயுதபாணி கோவிலில் நாளை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளதால், பகல் 2 மணிக்கு தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்படும். மாலை 6 மணிக்கு மீண்டும் தரிசனம் அனுமதிக்கப்படும்.

கார்த்திகை தீபத் திருவிழா

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இவ்விழா 7 நாட்கள் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் தீபத் திருவிழா கடந்த 18-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகர் அர்ச்சனை நடைபெறும். நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அதிகாலை 4.30 மணிக்கு விழா பூஜையும் அதனைத் தொடர்ந்து சின்னக்குமாரர் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து யாகசாலை தீபாராதனை, மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

தரிசனம் ரத்து

மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். திருக்கார்த்திகையை முன்னிட்டு நாளை பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் பகல் 2 மணிக்கு படிப்பாதை கேட் தற்காலிகமாக அடைக்கப்படும். பின்னர் மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை இரவு மலைக்கோவிலில் நடக்கும் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X