

லால்குடி,
லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவில் ஆகும். இந்த கோவிலில் கடந்த மாதம் 15-ந் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. அன்று முதல் அம்மன் உலக மக்களின் நன்மைக்காக, பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களுக்கு அருள்புரிவது ஐதீகம்.
இதையடுத்து, பங்குனி தேரோட்ட திருவிழாவிற்கான கொடியேற்றம் 29-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். லால்குடி, அன்பில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் காலை முதல் மாலை வரை காளி வேடம் அணிந்து, அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். லால்குடி முதல் அன்பில் வரை வழிநெடுகிலும் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது.