

சுவாமிமலை:
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழாவில் வள்ளி கல்யாணம் நடைபெறும். அதற்குமுன், யானை உருவில் விநாயகர் வந்து வள்ளியை விரட்டுவது போன்ற புராண நிகழ்வு, முருகப்பெருமான் வள்ளியை மணக்க உதவும் ஒரு திருவிளையாடலாக கருதப்படுகிறது.
அதாவது, வேடர்குல அரசன் நம்பிராஜனின் வளர்ப்பு மகளான வள்ளி, தினைபுனம் காவல் புரியும்போது, அவள் அழகை கண்ட நாரத முனிவர் அதனை முருகப்பெருமானிடம் கூற, வள்ளியின் அழகில் மயங்கி அவரை மணம் புரிந்திட முதியவர் வேடம் தாங்கி வந்த முருகப்பெருமான், களைப்பாக இருப்பதாக கூறி, வள்ளியிடம் தேனும் தினைமாவும் உண்டபின், தாகம் என கூறி அருகில் இருந்த சுனைக்கு வள்ளியை அழைத்து செல்கிறார். அங்கு வள்ளியை மணம் புரிவதாக முருகப்பெருமான் கூற, முதியவரின் குறும்பில் வள்ளி கோபிக்கிறார். அப்போது முருகன், விநாயகரை நினைக்க, அவர் யானையாக வந்து வள்ளியை விரட்டுகிறார். மிரண்ட வள்ளி, பயத்தில் முருகனை அணைக்க, பின் முருகன் சுயரூபம் காட்டியவுடன், நம்பிராஜன், வள்ளியை முருகனுக்கு மணம் முடித்து வைக்கிறார்.
இந்த புராண நிகழ்வை சித்தரிக்கும் வகையில் சுவாமிமலை சுவாநாத சுவாமி கோவிலில் பங்குனித் திருவிழாவின் ஒரு பகுதியாக, வள்ளியை யானை விரட்டும் (யானை விரட்டல்) நிகழ்ச்சி அரசலாற்றங்கரையில் நடத்தப்படும். அவ்வகையில் இந்த ஆண்டின் யானை விரட்டல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இன்று அதிகாலை திருவலஞ்சுழி அரசலாற்றில், தினைபுனம் காத்த வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின் முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தி காட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.