அம்பை காசிநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம்

விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டம்
தேரோட்டம்
Published on

அம்பை,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை காசிநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருந்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் நிகழாண்டு பங்குனிப் பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தன. 8ஆம் திருநாளான நேற்று இரவு 7 மணிக்கு அகஸ்தியருக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

9ஆம் திருநாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினர். சிறப்பு பூஜைக்குப் பிறகு, காலை 9 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது.

இதில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வாகைக்குளம், மன்னார்கோவில், பிரம்மதேசம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் “சிவ சிவ ஹர ஹர” என்று முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர். 10ஆம் திருநாளான நாளை காலை 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com