

பழனி,
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும். பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டின் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 9.45 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 1ம்தேதி பங்குனி உத்திர நாளில் பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 4ம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின்போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.