பங்குனி உத்திர திருவிழா... பழனியில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழனியில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டம்
பழனியில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டம்
Published on

பழனி,

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

அவ்வகையில் இந்த ஆண்டின் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 11.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருத்தேருக்கு எழுந்தருளினர்.

மாலை 4.30 மணிக்கு விநாயகர், அஸ்திரதேவர் எழுந்தருளிய சிறிய தேர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. பின்னர் பெரிய தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ''வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா'' என்று சரண கோஷம் எழுப்பியபடி தேர் இழுத்தனர்.

கிரி வீதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருத்தேரில் வலம் வந்த சுவாமியை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தை முன்னிட்டு பழனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4ம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com