

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தவளவெண்ணகையாள் சமேத பாலைவனநாதர் ஆலயத்தின் சித்திரை பௌர்ணமி விழா கடந்த மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினந்தோறும் இரவு பல்வேறு விதமான வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கண்ணாடி பல்லக்கு புறப்பாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் கண்ணாடி பல்லக்கில் தவளவெண்ணகையாள் சமேத பாலைவனநாதர் சுவாமி எழுந்தருள கோவிலில் இருந்து பல்லக்கு புறப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மலர் தூவி சுவாமி தரிசனமும், கோபுர தரிசனமும் செய்தனர்.
கோவிலில் இருந்து புறப்பட்ட பல்லக்கு பாபநாசம், திருப்பாலைத்துறை முக்கிய வீதிகளில் மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.