திருப்பதி ஏழுமலையானின் பாரிவேட்டை உற்சவம்

பாரிவேட்டை உற்சவத்தில், மலையப்பசாமி சார்பில் அர்ச்சகர் ஒருவர் ஈட்டியை எறிந்து புலியை வேட்டையாடுவதுபோல் நடித்துக்காட்டினார்.
மகர சங்கராந்திக்கு அடுத்த நாளான மாட்டுப் பொங்கலான நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே பாரிவேட்டை உற்சவம் நடந்தது. அதே நாளில், பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக கோதாதேவி பரிணய உற்சவமும் நடந்தது.
விழாக்களின் ஒரு பகுதியாக திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் முதலில் திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு வைத்து பெரிய ஜீயர் சுவாமிகள் சிறப்புப்பூஜைகள் செய்தார். பெரிய ஜீயர் மடத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, மூலவர் ஏழுமலையானுக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
அதிகாலை பூஜைகள் முடிந்ததும் மலையப்பசாமி ஒரு திருச்சி பல்லக்கில் எழுந்தருளினார். அவரை தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் மற்றொரு திருச்சி பல்லக்கில் எழுந்தருளினார். உற்சவர்கள் இருவரும் மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க பாரிவேட்டை மண்டபத்தை அடைந்தனர். அங்கு புண்யாஹவாசனம் செய்யப்பட்ட பிறகு மலையப்பசாமி சடங்குகளுக்கான மேடையில் எழுந்தருளினார். அப்போது மலையப்பசாமிக்கு சிறப்புப்பூஜைகள், நைவேத்தியங்கள் மற்றும் ஆரத்தி ஆகியவை செய்யப்பட்டன.
ஸ்ரீகிருஷ்ணர் தனியாக பாரம்பரியமாக கொல்லா பூஜை செய்யப்படும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பால் மற்றும் வெண்ணெய் படைக்கப்பட்ட பிறகு, ஆரத்தி காட்டப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணர் மீண்டும் மலையப்பசாமியிடம் வந்தார். அப்போது ஒரு யாதவ பக்தரால் படைக்கப்பட்ட பால் மற்றும் வெண்ணெய் மலையப்பசாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ஆரத்தி காட்டப்பட்டு, அந்தப் பக்தருக்கு மரியாதை செய்யப்பட்டது.
அதன்பிறகு பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. மலையப்பசாமி சார்பாக ஒரு அர்ச்சகர் கையில் ஈட்டியை ஏந்தியவாறு புலியை வேட்டையாடுவதுபோல் நடித்துக் காட்டி சிறிது தூரம் முன்னோக்கி ஓடி ஈட்டியை 3 முறை வீசி எறிந்தார். இந்தப் புனித நிகழ்ச்சியை காண பாரிவேட்டை மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
உற்சவம் முடிந்த பிறகு மலையப்பசாமி பாரிவேட்டை மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் நுழைவு வாயிலை அடைந்தார். கோவில் வாசலில் ஹத்திராம்ஜியின் புனிதமான பிரம்பை மலையப்பசாமி பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார். இத்துடன் பாரிவேட்டை உற்சவம் நிறைவடைந்தது.
இந்த சிறப்பு உற்சவ நிகழ்ச்சியில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி மற்றும் மூத்த அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமி கோவிலிலும் பாரிவேட்டை உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மாலை 3.30 மணியளவில் கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், ஸ்ரீ ஆண்டாள் சகிதமாக, கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரேணிகுண்டா சாலையில் அமைந்துள்ள பாரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஆஸ்தானம் மற்றும் பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகள் நகர வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மாலை 6.00 மணிக்கு கோவிலை அடைந்தனர்.






