திருப்பதியில் பவித்ர பூர்ணாஹூதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு

மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளின்போது, அறிந்தோ அறியாமலோ அர்ச்சகர்கள், ஆலய ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்யும் தவறுகளால் நிகழும் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக ஆகம விதிகளின்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டின் பவித்ரோத்சவம் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் பவித்ர பிரதிஷ்டையும், இரண்டாவது நாளில் பவித்ர மாலைகள் சமர்ப்பணமும் நடைபெற்றது.

மூன்றாவது மற்றும் நிறைவு நாளான நேற்று காலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு ஸ்னாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர்கள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரவு 7 மணியளவில் பிரதான நிகழ்வான பவித்ர பூர்ணாஹூதி நடைபெற்றது. ஆகம விதிகளின்படி நடைபெற்ற பவித்ர பூர்ணாஹூதி நிறைவடைந்த பின்னர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கோவிலைச் சுற்றி வந்து கருவறைக்குள் மீண்டும் நுழைந்தார். இத்துடன் பிவித்ரோற்சவம் நிறைவு பெற்றது.

இந்த சிறப்பு வழிபாட்டில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை நிர்வாக அதிகாரி லோகநாதன், பேஷ்கார் ராமகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com