

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடைபெறுவது வழக்கம். உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி, புரட்டாசி பவுர்ணமி தினமான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். சிலர் கற்பூர ஆரத்தி காண்பித்து பகவானை வழிபட்டனர்.
திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, தலைமை விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.