

வேதாரண்யம்,
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைப்போல் வேதாரண்யம் வேதமிர்த ஏரியில் அமைந்துள்ள தடாக நந்தீஸ்வரர், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன் கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் மேற்கு முகமாய் அமர்ந்து ருத்ரகோடீஸ்வரராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது, ருத்ரகோடீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் 108 லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, வில்வ பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து, சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.