

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மேட்டுத்தெருவில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி கடந்த 26-ந்தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக பூ தட்டுக்கள் எடுத்து வந்து பூக்களை அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு மற்றும் பொங்கல் வழிபாடு நேற்று நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி, பறவை காவடி எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.