திருமலை ஆஸ்தான மண்டபத்தில் புரந்தரதாசர் ஆராதனை மகோற்சவம்- 3 நாட்கள் நடக்கிறது

புரந்தரதாசர் ஆராதனை மகோற்சவத்தின் ஒரு பகுதியாக 12-ம் தேதி வெங்கடேஸ்வரா நவரத்ன சங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக சங்கீத மேதை எனப் போற்றப்படும் புரந்தரதாசரின் ஆராதனை மகோற்சவம் திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்ய திட்டத்தின் கீழ் 17 முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான 17-ந்தேதி சுப்ரபாதம், தியானம், குழு பஜனைகள், நகர சங்கீர்த்தனம், புரந்தர இலக்கிய கருத்தரங்கம், பல்வேறு மடாதிபதிகளின் ஆன்மிக அருளுரை மற்றும் சங்கீர்த்தன மாலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
2-வது நாளான 18-ந்தேதி காலை அலிபிரிக்கு அருகில் உள்ள புரந்தரதாசரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்படும். மாலை 6 மணிக்கு உற்சவர் மலையப்பசாமி நாராயணகிரி தோட்டத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இறுதி நாளான 19-ந்தேதி சுப்ரபாதம், தியானம், குழு பஜனைகள், நகர சங்கீர்த்தனங்கள், சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புரந்தரதாசர் ஆராதனை மகோற்சவத்தின் ஒரு பகுதியாக வெங்கடேஸ்வரா நவரத்ன சங்கீர்த்தன நிகழ்ச்சி 12-ம் தேதி திருமலை பாபவிநாசனம் சாலையில் உள்ள கல்யாண மஸ்து அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் 300 புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்று வெங்கடேஸ்வரரை போற்றி புரந்தரதாசரால் இயற்றப்பட்ட, நவரத்தினங்கள் போன்ற 9 பக்தி பாடல்களை பாடினர்.






