புரட்டாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

கோவிலில் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று பகல் 11.49 மணிக்கு தொடங்கியது.
பவுர்ணமியை முன்னிட்டு நேற்று கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். நேற்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர்.
மேலும் நேற்று காலை முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கோவிலில் பக்தர்கள் விரைந்து மற்றும் எந்தவித சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.53 வரையில் உள்ளதால் நேற்று இரவில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது.
நகரில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தி கிரிவலம் சென்ற பக்தர்கள் தங்கள் பகுதிக்கு எந்தவித சிரமமுமின்றி திரும்பி சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியிலும், கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.






