

மகா விஷ்ணுவின் அவதாரங்களில் உயர்வானதாக போற்றப்படும் ராமவதாரத்தை சிறப்பிக்கும் வகையில், ராம பிரான் அவதரித்த நவமி தினம், ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த நன்னாளில் ராம பக்தர்கள் விரதம் இருந்து ராமருக்கு பிடித்தமான நைவேத்யங்களை படையலிட்டு வழிபடுகிறார்கள். கோவில்களுக்குச் சென்று ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள்.
அவ்வகையில், இன்று ராம நவமி (27.3.2026) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு உற்சவங்கள், பஜனைகள் மற்றும் ராம் லீலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று காலை முதலே சிறப்பு வழிபாடுகள் தொடங்கி நடைபெறுகின்றன. திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
கோவில்களில் இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பகவானை தரிசனம் செய்கின்றனர். ஆலய வளாகத்தில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர். வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ஆன்மிக ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. நதிகளில் புனித நீராடி பிரார்த்தனை செய்கின்றனர்.
அயோத்தி ராமஜென்மபூமியில் உள்ள ராமர் கோவிலில் காலைமுதலே ராமபிரானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றதுடன், மக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். ராம நவமியை முன்னிட்டு கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும், நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும் என்பது ஐதீகம். ராமநாமத்தை உச்சரித்து வழிபடுவதால் ராமபிரானின் அருட்பார்வையுடன் ஆஞ்சநேயரின் அருட்பார்வையும் கிடைக்கும்.