

சென்னை,
மகாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே மிகவும் உயர்வானதாக போற்றப்படும் அவதாரம் ராம அவதாரமாகும். தெய்வம் மனிதராக அவதரித்து, மனிதர்கள் தர்மத்தின் வழியை பின்பற்றி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய அவதாரம் என்பதால் இது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. ராமர் அவதரித்த தினத்தை ராம நவமி திருநாளாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு ராம நவமி நாளை (27ம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்தநிலையில், ஸ்ரீமன் நாராயணன் நின்றான், கிடந்தான், அமர்ந்தான், இருந்தான் என்று நான்கு நிலையாக திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்த திருத்தலம் திருநீர்மலை ஆகும்.
திரேதாயுகத்தில் இருந்து எம்பெருமான் ஸ்ரீராம சந்திரமூர்த்தி சீதா பிராட்டியுடன் அனேக புண்ணிய தலங்களில் அர்ச்சாவதாரமூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களை காத்து வருகிறார். திருநீர்மலையின் அபிமான தலமாகிய சென்னை கோவிலம்பாக்கம் அருகே நலம் தரும் நன்மங்கலத்தில் உள்ள ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ராம நவமி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டு ராமநவமி விழா கடந்த 21-ம் தேதி தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஸ்ரீராமர்,ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீஹயக்கீர்வர், தன்வந்திரி, ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீநரசிம்மர் ஆகியோருக்கு இன்று திருமஞ்சனமும், லட்சார்ச்சனை சங்கல்பமும் நடந்தது. அதனைதொடர்ந்து மூலவர் ராமர்,ஸ்ரீஆஞ்சநேயர் உற்சவருக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது.
நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு சீதா கல்யாண வைபவம் நடத்தப்பட்டு, வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமபாத சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.