

ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று 1017-ம் ஆண்டு ராமானுஜர் பிறந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் சித்திரை விழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவமும், ராமானுஜருக்கு 10 நாட்கள் அவதார உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ராமானுஜரின் 1009-வது அவதார உற்சவம் இந்த மாதம் 13-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. தங்க பல்லக்கு, மங்களகிரி, சிம்ம வாகனம், யாழி வாகனம், சூரிய பிரயை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வலம் வந்து ராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ராமானுஜர் அவதார உற்சவத்தின் முக்கிய திருவிழாவாக கருதப்படும் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர் தேரடி வீதி, திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து நிலையை அடைந்தது.