ரத சப்தமி விழா: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது 3 நாட்களுக்கு நிறுத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது.
ரத சப்தமி விழா: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது 3 நாட்களுக்கு நிறுத்தம்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. ஒரே நாளில் உற்சவர் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சூரிய ஜெயந்தி விழா

மகர மாத சுக்ல பட்ச சப்தமி நாளில் சூரிய ஜெயந்தி எனப்படும் ரத சப்தமி புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. வேதங்களின் படி உலகுக்கு ஞானத்தை அருளிய சூரிய பகவானின் அவதார தினம் இந்த நாளாகும்.

அந்த நாளான வருகிற 25-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி காலை, இரவு பல்வேறு வாகனச் சேவைகள் நடக்கின்றன. மொத்தம் 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடனும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

வாகனச் சேவை விவரம் வருமாறு:-

கருடசேவை

25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 6.45 மணியளவில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளும் உக்ர சீனிவாச மூர்த்திக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

ஆர்ஜித சேவைகள் ரத்து

ரத சப்தமி விழாவையொட்டி 25-ந்தேதி கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகிய ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம், வி.ஐ.பி. புரோட்டோக்கால் முக்கியஸ்தர்களை தவிர அனைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேலும் ரத சப்தமியையொட்டி திருப்பதியில் 24 முதல் 26-ந்தேதி வரை இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com