அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி நியமனம்

அயோத்தில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ராமர் கோவில் உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி நியமனம்
Published on

லக்னோ,

அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோவில்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ராமர் கோவில் உள்ளது. அயோத்தி ராமர் கோவிலை ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.

அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கடவுள் ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கோவிலுக்கு நன்கொடையாகவும், காணிக்கையாகவும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய், தங்கம், வெள்ளி நகைகளை பக்தர்கள் வழங்குகின்றன. இந்த நன்கொடை, காணிக்கை மற்றும் வரவு, செலவை ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.

காணிக்கை முறைகேடு

இதனிடையே, ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கோவிலில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் காணிக்கை, நன்கொடை பணத்தை திருடியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 80 லட்சம் ரூபாய் வரை காணிக்கை பணத்தில் திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பூதாகாரமான நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தலைமை செயல் அதிகாரி

காணிக்கை முறைகேடு புகார் தீவிரமடைந்துள்ள நிலையில் ராமர் கோவிலை நிர்வகிக்கும் ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு தலைமை செயல் அதிகாரியை (சிஇஓ) நியமனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடந்த18ம் தேதி கடைசி நாள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

5000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

அதன்படி, அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரி பணிக்கு 5000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்தனர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவ தளபதிகள், பத்ரிக்கையாளர்கள், முன்னாள் தலைமை செயலாளர், முன்னாள் டிஜிபி உள்பட நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி நியமனம்

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஜிதேந்திர மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய விமானப்படையின் மேற்கு விமானப்படை தலைமை தளபதியாக செயல்பட்டுள்ளார். 39 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றிய ஜிதேந்திர மிஸ்ரா கடந்த ஏப்ரல் மாதம் பணி ஓய்வுபெற்றார். அதன்பின்னர் அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்திருந்த ஜிதேந்திர மிஸ்ரா அப்பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரி ஜிதேந்திர மிஸ்ராவின் முதன்மை பணியாக, அறக்கட்டளை மீதான பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பணி உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com