

சென்னை,
சத்குருவின் பார்வையில் கிருஷ்ணரின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் வகையில் உருவான 'கிருஷ்ண லீலா' எனும் புதிய நூல் அறிமுக விழா சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். முரளி, அகமதாபாத் வருமான வரித்துறை ஆணையர் கவிதா ராமானுஜம், 'கிருஷ்ண லீலா' நூலை தமிழில் எழுத்தாக்கம் செய்த பிரபல எழுத்தாளர் சுபா, உலகத்தமிழ்ச் சங்கத்தின் இயக்குனரும் பிரபல பேச்சாளருமான முனைவர் பர்வீன் சுல்தானா மற்றும் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, நூலினை அறிமுகம் செய்து வைத்து, நூல் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து சிறப்புரை ஆற்றினர்.
கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, கிருஷ்ணரின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் வகையில் “லீலா” என்ற சிறப்பு நிகழ்ச்சியை சத்குரு வழிநடத்தினார். கிருஷ்ணர் தனது வாழ்வின் பல முக்கிய தருணங்களை எப்படி விளையாட்டுத்தனத்துடன் இலகுவாகக் கையாண்டார் என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி சத்குருவால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அந்த லீலா நிகழ்ச்சியில் கிருஷ்ணரின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து சத்குரு ஆற்றிய உரைகளை, பிரபல எழுத்தாளர் ‘சுபா’ தமிழில் எழுத்தாக்கம் செய்தார். இது 'ஈஷா காட்டுப்பூ' மாத இதழில் 150-க்கும் மேற்பட்ட மாதங்கள் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடர் தற்போது ஈஷா லைஃப் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முதல் பாகம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிருஷ்ணர் குறித்து சத்குரு கூறுகையில், “கிருஷ்ணனை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமநிலை தவறாத மூளை, அதே சமயம் கண்மூடித்தனமாய் உருகும் இதயம் இரண்டும் இருந்தால்தான் சாத்தியம்” எனக் கூறியுள்ளார்.
இந்த 'கிருஷ்ண லீலா' புத்தகம் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தகக் கடைகளிலும், பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஈஷா லைஃப் போன்ற இணையதளங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
புதுச்சேரி, திருச்சி, மதுரையைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இவ்விழா நடைபெற்றுள்ளது. புதுச்சேரியில் இசைக்கவி ரமணன், திருச்சியில் மரபின் மைந்தன் முத்தையா, தாமல் கோ. சரவணன், புதுகை ச. பாரதி மற்றும் மதுரையில் ராம. சீனிவாசன், பேராசிரியர் குருஞானாம்பிகா உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்று புத்தகம் குறித்து சிறப்புரைகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.