

சென்னை,
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பாரதிய வித்யா பவன் மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து வழங்கும் 'சத்குருவின் குரல் - மாதந்தோறும் சந்திப்போம்... சிந்திப்போம்' என்ற புதிய தொடர் நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் 'ஆதியோகி சிவன் - யோகத்தின் மூலம்' என்ற புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி, பாரதிய வித்யா பவன் இயக்குனர் ராமசாமி மற்றும் கலைமாமணி இசைக்கவி ரமணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி பேசுகையில், “இன்றைய காலத்தில் எதிர்மறை கருத்துகள் பெருகி வருகின்றன. ஆகையால் நல்ல நேர்மறைக் கருத்துக்களை நாம் சத்தம் போட்டு கூற வேண்டும். அந்த வகையில் நேர்மறையான சிந்தனைகள் என்றாலே சத்குரு தான் நினைவுக்கு வருகிறார். அவரின் நல் கருத்துகளை மாதந்தோறும் நாம் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியை துவங்குகிறோம். இந்தப் புத்தகம் பெரிய வெற்றி அடையும் என்பதை விட, இப்புத்தகம் பலருக்குள் மாற்றங்களை உருவாக்கும் என நம்புகிறேன்.” எனப் பேசினார்.
இவ்விழாவில் 'ஆதியோகி சிவன் - யோகத்தின் மூலம்' புத்தகத்தை அறிமுகம் செய்து இசைக்கவி ரமணன் பேசுகையில் "இலக்கியம், ஆன்மிகம் சார்ந்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய பாராட்டுக்கு உரியவை. ஒரு குருவின் வேலை என்பது ஒரு தூய்மைப் பணியாளரின் பணியைப் போன்றது. நமக்குள் உள்ளே புகுந்து தூய்மை செய்யக்கூடிய பணியை ஒரு குருதான் செய்ய முடியும். அதனால்தான் 'சத்குருவின் குரல்' என்ற இந்த நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார்.
சத்குருவின் ஆதியோகி சிவன் புத்தகம், ஒரு புத்தகம் என்று கூற முடியாது. இது ஒரு வழிமுறை. இந்தப் புத்தகம் ஆதியோகியின் வரலாறு அல்ல, அந்த ஆதியோகி சிவனை உள்வாங்கிக் கொள்ளும் வழிமுறையாக இந்தப் புத்தகம் இருக்கிறது.
சிவனே யோகத்தின் மூலம், அவனே அதன் இலக்கு மற்றும் அவன்தான் அந்த யோகமே என்பதை சத்குரு இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.
சிவனை 'ஒன்றுமற்ற ஒன்று' என்று சத்குரு கூறுகிறார். அதாவது பூரணமாக இருக்கும் ஒன்றாகவும் சூனியமாக இருக்கும் ஒன்றுமற்றதாகவும் சிவன் இருக்கிறார் என்பதை சத்குரு விளக்கியுள்ளார்.” எனப் பேசினார்.
முன்னதாக பேசிய ஈஷா ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பேசுகையில், “இன்று தொடங்கி இருக்கும் ‘சத்குருவின் குரல்’ நிகழ்ச்சி மாதந்தோறும் நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு சத்குருவின் நூல்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சி அடுத்த 12 மாதங்களுக்கு சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற உள்ளது. இதற்கு காரணமாக இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி மற்றும் பாரதிய வித்யா பவன் சாமிநாதன் உள்ளிட்டோருக்கு நன்றி” எனக் கூறினார்.
"ஆதியோகி சிவன் - யோகத்தின் மூலம்" என்ற புத்தகம், முதல் யோகியான ஆதியோகி மனிதகுலத்திற்கு வழங்கிய யோக அறிவியலின் ஆழம் மற்றும் பல்வேறு பரிமாணங்கள் குறித்த விரிவான தகவல்களை வாசகர்களுக்குத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் மனிதர்கள் தங்கள் வரம்புகளைக் கடந்து வாழ்வின் உச்சபட்ச சாத்தியங்களை எட்டுவதற்கு ஆதியோகி வழங்கிய 112 வழிமுறைகளையும், தன்னுள் நிகழும் மாற்றத்தின் மூலமாக நல்வாழ்வை எப்படி அடைவது என்பதையும் மிகவும் எளிமையான நடையில் விளக்குகிறது.