

சோழவந்தான்,
சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், கருப்பண்ணசாமி, முனியாண்டி மற்றும் கன்னிமார் ஆகிய பரிவார தெய்வங்களும் எழுந்தருளியிருக்கிறார்கள். இக்கோவிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடந்தது.
இவ்விழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் பூஜை செய்து அங்கிருந்து வாண வேடிக்கை, மேளதாளத்துடன் சக்தி கரகம் எடுத்து வந்தனர்.
இன்று அதிகாலை கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊரை சுற்றி வந்தனர். பின்னர் கோவில் முன்பாக முளைப்பாரியை இறக்கி வைத்து பெண்கள் கும்மி பாட்டு பாடி ஆடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பலர் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.
நாளை அம்மன் கரகம் பூஞ்சோலை அடைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.