திருமுல்லைவாயில் நந்தியின் சிறப்பு

ஊருக்கு வரும் ஆபத்துகளை நந்தி பகவான் கவனித்து தடுத்துக் கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் ஆலயம்
திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் ஆலயம்
Published on

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் மன்னன், 'ஓணன்' மற்றும் 'காந்தன்' என்ற அசுர குலம் கொண்ட குறுநில மன்னர்களுடன் போரிடச் சென்றார். அவர்கள் எருக்கம் தூண்கள் நிறைந்த கோட்டைக்குள் மறைந்திருந்து போர் புரிந்தனர்.

மன்னன் யானை மீது செல்லும்போது, முல்லைக் கொடிகள் யானையின் காலைச் சுற்றிக்கொண்டன. அவற்றை வாளால் வெட்டும்போது, உள்ளே இருந்த லிங்கத் திருமேனியில் பட்டு ரத்தம் கசிந்தது. இதனால் வருந்திய மன்னன், தான் செய்த தவறை பொறுத்தருளும்படி இறைவனிடம் வேண்டினான். அப்போது மன்னன் முன் தோன்றிய சிவபெருமான், அறுதல் கூறியதுடன், அரசனை வாழ்த்தியருளி, அவருக்கு துணையாக தன் வாகனமான நந்தியை போருக்கு அனுப்பினார்.

இதையடுத்து நந்தியெம்பெருமான் துணையுடன் போரில் வெற்றிகொண்டான் மன்னன். பின்னர் தனது வெற்றிக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி சிறப்பிக்கும் வகையில் சிவபெருமானுக்கு அவ்விடத்தில் கோவில் எழுப்பினான். அசுரர்களை வென்று அவர்களின் கோட்டையில் இருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அந்த ஆலயம்தான் சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் ஆலயம் ஆகும். மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை இன்றும் காணலாம்.

பொதுவாகக் கோவில்களில் நந்தி எம்பெருமான் சிவபெருமானைப் பார்த்தபடிதான் அமர்ந்திருப்பார். ஆனால், இத்தலத்தில் மன்னனுக்குத் துணையாகப் போர்க்களத்தை (கோவில் வாசலை) நோக்கித் திரும்பி அமர்ந்துள்ளார்.

"இன்றும் ஊருக்கு வரும் ஆபத்துகளை நந்தி பகவான் கவனித்து தடுத்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது."

பகைவர்கள் மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்கவும், வரும் ஆபத்துகளை முன்கூட்டியே தடுக்கவும் நந்தி எம்பெருமான் இன்றும் வாசலைப் பார்த்தே காவல் காத்து வருகிறார் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

X

Daily Thanthi
www.dailythanthi.com