பிரம்மோற்சவ தேரோட்டம்: பக்தர்கள் வெள்ளத்தில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் வீதி உலா

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபட்டனர்.
சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள், தேரோட்டம்
சிங்கப்பெருமாள் கோவில் தேரோட்டம்
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள், விசேஷ திருமஞ்சனம் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.

பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதற்காக திருத்தேர் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் உற்சவர் நரசிம்ம பெருமாள் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜையைத் தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர்.

தேரில் வலம் வந்த நரசிம்மர்

தாரை தப்பட்டை உள்ளிட்ட மேள தாளங்களுடன் வாணவேடிக்கைகள் முழங்க, நான்கு மாட வீதிகளில் தேர் வலம் வந்தது. பக்தர்களின் வெள்ளத்தில் ஆடி அசைந்தபடி தேரில் வலம் வந்த பகவானை தரிசனம் செய்வதற்காக, வீதியின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

அன்னதானம்

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேர் வந்தபோது சாலையில் வெப்பத்தை தணிப்பதற்காக டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சிங்கப்பெருமாள் கோவில் தர்கா அருகே வந்தபோது மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இஸ்லாமியர்கள், பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கினார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com