

தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உருவாட்டி கிராமத்தில் மதுராந்தகி நாச்சியார் பரம்பரை அறங்காவலர், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குலதெய்வமாக இந்த அம்மன் விளங்குகிறார்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவ அம்மன் கோவிலில் இருந்து தேருக்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து தேர் முன்பாக தேங்காய்கள் உடைக்கப்பட்டு, தேரில் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். தேர் கோவிலின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
பக்தர்கள் பலர் கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் தங்கியிருந்து தேர் முன்பாக காவடிகள், பால்குடம், மற்றும் குழந்தை தொட்டில் எடுத்து வழிபட்டனர். தேர் நிலையை அடைந்ததும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களும், பூக்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது.