சிவகிரி: விஸ்வநாதப்பேரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

பூக்குழி இறங்கும் நிகழ்வை முன்னிட்டு திரவுபதி அம்மன், கிருஷ்ணர் மற்றும் அர்ச்சுனருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
பூக்குழி திருவிழா
Published on

சிவகிரி,

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் திரவுபதியம்மன், கிருஷ்ணர், அர்ச்சுனர் ஆகிய உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

9-ம் திருநாளான பூக்குழி திருநாள் விஸ்வநாதப்பேரியைச் சேர்ந்த சேனைத்தலைவர் சமுதாயத்தின் சார்பாக நடத்தப்பட்டது. மதியம் சேனைத்தலைவர் மண்டபத்தில் இருந்து பரிவட்டம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலையில் கோவிலை சென்றடைந்தனர். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிறப்பு பூஜைகள்

முன்னதாக அதிகாலையில் மூலவர், உற்சவர் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கோவிலின் முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் திடலில் அக்னி வளர்க்கப்பட்டது.

மாலை 5 மணியளவில் திரவுபதி அம்மன், கிருஷ்ணர் மற்றும் அர்ச்சுனருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளியதும் சப்பரம் புறப்பட்டது.

தீமிதித்த பக்தர்கள்

41 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பக்தி முழக்கமிட்டபடி முன்னே செல்ல, சப்பரம் பின்தொடர்ந்து மண்டபம் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக மாலை 6.15 மணி அளவில் கோவிலை அடைந்தது. அதன்பின்னர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய பூசாரி மாணிக்கம் முதலில் பூக்குழி இறங்கினார். அதன்பின்னர், 41 நாட்கள் விரதம் இருந்த 20 பெண்கள் உள்பட 77 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

10-ம் திருநாளான நேற்று காப்பு கட்டிகள் சங்கத்தின் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com