

சிவகாசி,
சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள் நடைபெறும் சித்திரை பொங்கல் விழாவில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-வது நாள் திருவிழாவான இன்று கயிர்குத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடம்பில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, மாறுவேடம் தரித்து, கையில் வேப்பிலை ஏந்தி கோவிலுக்கு சென்று வேப்பிலை படுக்கையில் உருண்டு வினோதமான முறையில் வழிபாடு நடத்தினர்.
வழிபாட்டின்போது பொங்கல் வைத்து, முளைப்பாரி, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.