

விருதுநகர்,
சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் இன்று மாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலையில் 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த சிறப்பு வழிபாட்டில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
பலர் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.