திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சிறப்புகள்

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா, 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சிறப்புகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Published on

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

தேவார பாடல் பெற்ற தலம்

திருப்பரங்குன்றம் திருத்திருத்தலத்தின் பெருமையைப் பற்றி சங்க கால நுால்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அகநானூறு, கலித்தொகை மற்றும் மதுரைக் காஞ்சி ஆகிய இலக்கியங்களில் பாடப் பெற்றுள்ளது. மேலும் சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியேராலும் பாடப்பெற்றுள்ளது.

முற்காலப்பாண்டியமன்னர்கள் காலங்களில் குடைவரைக்கோயிலாகத் தோற்றம் பெற்ற இத்திருக்கோயில், பிற்காலப் பாண்டியமன்னர்கள் காலங்களில் மேலும் பொலிவுபெற்று, நாயக்கர் காலத்தில் அழகிய மண்டபங்களையுடைய கோபுரத்துடன் ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. தென்புறத்திலுள்ள குடைவரைக் கோயிலுக்கு அருகில் சமணர்களின் கற்படுக்கை அமைந்துள்ளது.

நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய தலம், பரங்கிரிநாதர், சத்தியகிரீசர் என்று சிவபெருமானை போற்றும் தேவாரப் பாடல் பெற்ற தலம், மலையின் பின்புறம் உமையொரு பாகர், விநாயகர், நடராசர், வள்ளி-தெய்வானை முருகன், வியாச முனிவர், தேவார மூவர், பைரவர் காட்சியருளும் குடைவரைக் கோவில் உள்ள தலம், மலைமீது தீபத் தூண் உள்ள தலம், மலைமீது முருகனின் வேல்கொண்டு முற்காலத்தில் பூசிக்கப்பட்ட தலம் என பல சிறப்புகளைக் கொண்டது திருப்பரங்குன்றம்.

பாரம்பரிய மரபு

இங்கு மூலவராக முருகப் பெருமான் வீற்றிருந்தாலும், சமய மரபுப்படி இத்தலம் ஒரு சிவத்தலமாகவே போற்றப்படுகிறது. இறைவன் பரங்கிரிநாதர், சத்தியகிரீஸ்வரர் எனும் திருநாமங்களுடன் அழைக்கப்படுகிறார். இறைவி ஆவுடைநாயகி என்று அழைக்கப்படுகிறார்.

திருப்பரங்குன்றம் வரும் பக்தர்கள் முதலில் குடைவரைக் கோவிலில் உள்ள பரங்கிரிநாதரையும் அம்பாள் ஆவுடைநாயகியையும் வழிபட்ட பின்னரே, முருகப் பெருமானை வழிபட வேண்டும் என்பது இத்தலத்தின் பாரம்பரிய மரபாகும்.

தல புராணம்

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளைக் குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இதற்கு பரிகாரம் செய்யும் நோக்கில் பூலோகம் வந்து தவம் செய்தார் முருகப்பெருமான்.

அவரது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். இதனால் முருகப்பெருமானின் பாவம் விலகியது. முருகப்பெருமானுக்கு காட்சி கொடுத்த தலம்தான் திருப்பரங்குன்றம்.

தைப்பூச திருவிழா

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சி தந்தார். எனவே தைப்பூசத்தன்று, சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா, 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே, சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.

முருகன்-தெய்வானை திருமணம் நடந்த திருத்தலம்

இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள், துயர் களையப் பெற்றனர். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில், இந்திரன் தன் மகள் தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன்-தெய்வயானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா, விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாக திருப்பரங்குன்ற புராணம் கூறுகிறது.

இக்கோவிலில் வீரபாகு வழிதோன்றல்கள்‌ என்று அறியப்படும் செங்குந்த முதலியார்‌ மரபை சேர்ந்தவர்கள்‌ சுவாமியைச் சுமந்து செல்லும் சீர்பாத சேவையைத் தொன்று தொட்டு செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில், பங்குனி திருவிழா, தேரோட்டம்
பங்குனி தேரோட்டம்

பங்குனி பெருவிழா

இந்த மலையின் கிழக்குப் பகுதி பெரிய பாறையாகவும், மேற்கு பகுதி சிவலிங்கம் போலவும், வடக்குப் பகுதி கயிலாயம் போலவும், தெற்கு பகுதி யானை ஒன்று படுத்திருப்பது போலவும் காட்சி தருவதை பார்க்கலாம்.

பங்குனி பெருவிழாவின்போது கோவில் வாசலில் இருந்து சுமார் 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் பெரியதேர் வலம் வரும். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து தரிசனம் செய்வார்கள். பவுர்ணமி அன்று, கிரிவலம் வந்து வழிபட்டால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

X

Daily Thanthi
www.dailythanthi.com