பிரம்மதேவர் பூஜித்த ஸ்ரீஆதிநாத ஐயனார்

காடந்தேத்தி திருத்தலத்தில் பிரம்மதேவரால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் அவரது பெயரால் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீபூர்ணாம்பிகை, ஸ்ரீபுஷ்களாம்பிகை சமேத ஸ்ரீஆதிநாத ஐயனார்
ஸ்ரீபூர்ணாம்பிகை, ஸ்ரீபுஷ்களாம்பிகை சமேத ஸ்ரீஆதிநாத ஐயனார்
Published on

வானளாவிய மாளிகைகளை உடையதும், புண்ணியசாலிகளின் இருப்பிடமாய் திகழ்வதுமான தேஜோவதியில் வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீ மகா சாஸ்தாவை தரிசனம் செய்து ஆசி பெறுவதற்காக, ஒருநாள் அவரது மாளிகைக்கு பிரம்மன், இந்திரன் போன்ற தேவர்கள் வந்தனர். அங்கே திவ்யமான ஆசனத்தில் ஸ்ரீபூர்ணாம்பிகை, ஸ்ரீபுஷ்களாம்பிகை சமேதராய் நித்யகல்யாண சுந்தரமூர்த்தியாய் அமர்ந்திருக்கும் பகவான் ஸ்ரீ மகா சாஸ்தாவை நமஸ்கரித்து பலவாறு போற்றி துதித்தனர்.

“சர்வலோகநாயகரே! கருணைக்கடலே! சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் முத்தொழில்களை புரியும் பொருட்டு பிரம்ம, விஷ்ணு, ருத்ர ரூபங்களை தரித்திருக்கும் மூலமுதற்பொருளான உங்களுக்கு நமஸ்காரம், உங்களது அருளாலேயே பிரம்மாதி தேவர்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ்கின்றனர். உங்களுக்கு தாய், தந்தை, குரு, தெய்வம், ஐஸ்வர்யம் ஆகிய அனைத்தும் நீங்களே, உங்களுக்கு எங்கள் நமஸ்காரம்” என்று போற்றினர்.

அவர்களின் பணிவு மற்றும் பக்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்த மகா சாஸ்தா, அவர்களுக்கு ஆசி வழங்கி அருள்பாலித்தார்.

இவ்வாறு இந்திரன் முதலானோர் பகவானை ஸ்தோத்திரம் செய்து வழிபட்டபோது பிரம்மதேவர் மட்டும், விதிவசத்தால் மமதை கொண்டு பகவானை நமஸ்கரிக்கவில்லை. “நானோ மூவரில் ஒருவன், இவ்வுலகை சிருஷ்டிப்பவன், நான் ஏன் ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்த இந்த சின்னஞ்சிறு பாலகனை வணங்கவேண்டும்?” என்று எண்ணியவராய் பகவானை வணங்காமல் நின்றுகொண்டிருந்தார்.

பின்னர் மற்ற தேவர்கள் பகவானின் சன்னதியை விட்டு வெளியேறும்போது அவர்களுடன் சேர்ந்து பிரம்மதேவரும் வெளியேறினார். ஆனால் மகா சாஸ்தாவை அவமதித்து அவரை வணங்காமல் வந்த பெரும்பாவத்தின் காரணமாக பிரம்ம தேவருக்கு சதுர்வேதங்களும் மறந்துபோயின. சிருஷ்டி செய்யும் திறனையும் இழந்தார். அதனால் பெருந்துன்பமுற்ற பிரம்மதேவர் செய்வதறியாது கைலாசத்தை நோக்கி ஓடினார். அங்கு சிவபெருமானை நமஸ்கரித்து தனக்கு ஏற்பட்ட துன்பத்தில் இருந்து காப்பாற்றி அருளும்படி வேண்டினார்.

அதனைக் கேட்ட சிவபெருமான், தன் குமாரன் மகா சாஸ்தாவை வணங்காமல் வந்ததால் ஏற்பட்ட பாவத்தினால் இத்தகைய துன்பத்தை அடைந்ததாக கூறினார்.

“எனக்கும் சர்வேஸ்வரனாகிய மகா சாஸ்தாவுக்கும் சிறிதும் பேதமில்லை. நானே அவன், அவனே நான். அறிவிலிகளே என்னையும் அவனையும் பிரித்து பேசுவர். அவனே சகல உயிர்களின் வடிவம். அவனே எல்லாவுலகங்களிலும் வியாபித்திருப்பவன். இவ்வுலகில் உள்ள சிரேஷ்டமானவைகள் யாவும் அவனது அம்சங்களே. அவனே வேதங்கள் போற்றும் எல்லாம் வல்ல பரம்பொருள். அத்தகை பரம்பொருளாகிய என் குமாரனின் பெருமைகளை நீ மமதையின் காரணமாக உணர தவறிவிட்டாய்” என சிவபெருமான் எடுத்துரைத்தார்.

அதனைக்கேட்டு தனது அறியாமை நீங்கி ஞானம் பெற்ற பிரம்ம தேவரும் தான் செய்த பெருந்தவறை உணர்ந்து, தனது பாவத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை கேட்டார்.

அப்போது சிவபெருமான், பிரம்ம தேவரை பூலோகம் சென்று பாரதத்தின் தென்பகுதியில் ஜாப்யேஸ்வரம் (காடந்தேத்தி) என்ற திவ்ய ஸ்தலத்திற்கு சென்று, அங்கு சுயம்புமூர்த்தியாய் தோன்றி ஸ்ரீஆதிநாதன் என்ற திருப்பெயருடன் அருள்பாலிக்கும் மகா சாஸ்தாவை பக்தி சிரத்தையுடன் ஆராதித்து வந்தால் அவன் அருளால் பாவம் நீங்கி மீண்டும் பழைய நிலையை அடையலாம், என்று கூறியருளினார்.

அதன்படி மகா சாஸ்தாவின் ஆலயத்தை அடைந்த பிரம்ம தேவர், அங்கு பகவானை ஆதிக்கலானார். ஆராதனைகளுக்காக ஆலயத்தின் தென்கிழக்கு பகுதியில் ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தினார். இவ்வாறு ஆதிநாதரை பிரம்மதேவர் பயபக்தியுடன் பூஜித்து வந்த நிலையில், ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பகவான், வேதநெறிப்படி பூஜிப்பதுடன் ஆலயத்தை தினம் நாற்பத்தெட்டு பிரதட்சிணங்களும் செய்து வணங்கினால் விரைந்து அருள்புரிவதாக கூறினார்.

அதன்படி தினமும் நாற்பத்தெட்டு முறை பிரதட்சிணங்கள் செய்து பகவானை நமஸ்கரித்து வரலானார். இவ்வாறாக நாற்பத்தெட்டு நாட்கள் சென்றதும் பிரம்மதேவருக்கு நேரடியாக காட்சி கொடுத்தார் பகவான் மகா சாஸ்தா.

அப்போது பிரம்மதேவர் ஆனந்தக் கண்ணீர் மல்க, சாஸ்தாவை வணங்கினார். பிரம்மதேவரின் பூஜைகளால் மகிழ்ந்த சாஸ்தா, அவரது பாவங்களை போக்கினார். சதுர்வேதங்களின் அறிவையும் சிருஷ்டி திறனையும் இப்போதே பெறுவாய் என்று அருள் செய்தார்.

மேலும், “உன்னால் உருவாக்கப்பட்ட இந்த தீர்த்தத்தில் நீராடி என்னை அபிஷேக அர்ச்சனைகளால் திருப்தி செய்து எனது ஆலயத்தை தினம் நாற்பத்தெட்டு பிரதட்சிணங்கள் வீதம் தொடர்ந்து நாற்பத்தெட்டு தினங்கள் செய்பவர்களுடைய பெரும் பாவங்களையும் போக்கி, அவர்களின் மனதில் விரும்பும் காரியங்களை இனிதே நிறைவேற்றியருள்வேன். மேலும் பிரம்மனாகிய நீ என்னை இந்த ஸ்தலத்தில் பக்தி சிரத்தையுடன் ஆராதித்ததன் நினைவாக, இனி இந்த தலம் பிரம்மபுரம் என்றும் பெயர்பெற்று விளங்கும்” எனக் கூறி ஆசீர்வதித்தார். பிரம்மதேவரும் தான் இழந்த சக்திகளை திரும்ப பெற்றவராய் மகிழ்ச்சியுடன் சத்யலோகம் திரும்பினார்.

பிரம்மதேவரால் ஏற்படுத்தப்பட்ட அந்த தீர்த்தம் அவரது பெயரால் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்த்தில் நீராடி, அய்யனாரை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தோஷம் தீரும், துஷ்ட சக்திகளால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ளது காடந்தேத்தி ஆதிநாத ஐயனார் கோவில்.

(தகவல்: காடந்தேத்தி மகா சாஸ்தா புராணம்)

X

Daily Thanthi
www.dailythanthi.com