

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களான சோமாஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் புருஷாமிருக வாகனத்தில் எழுந்தருளி திருப்பதி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. மேலும் மூலவருக்கும், உற்சவர்களுக்கும் அபிஷேகம், உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
இந்நிலையில் விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் 6.30 மணி முதல் 9 மணி வரை நடராஜப் பெருமான் வீதியுலா நடைபெற்றது. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய நடராஜர், அண்ணா ராவ் சதுக்கம் வரை ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவிலுக்கு திரும்பினர்.
9 மணியளவில் சைவ ஆக முறைப்படி திரிசூல ஸ்னானம் (திரிசூல தீர்த்தவாரி) நடைபெற்றது. இதற்காக உற்சவமூர்த்திகள் மற்றும் கபிலேஸ்வர சுவாமியின் தெய்வீக ஆயுதமான திரிசூலத்தை திருக்குளத்தின் கரையில் எழுந்தருளச் செய்தனர். பின்னர் அமைதி மற்றும் செழிப்பை வேண்டி, ஸ்னாபன திருமஞ்சனம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து திரிசூலத்தை திருக்குளத்தில் மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்னானம் செய்யப்பட்டது. மேலும், மூலவருக்கு பூர்ணாஹுதி, கலசோத்வாசம் மற்றும் கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் பிரம்மோற்சவம் நிறைவுபெறும். பின்னர், இரவு 8 மணி முதல் 10 மணி வரை ராவணாசுர வாகன சேவை நடைபெறும்.