சீனிவாசமங்காபுரம் பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக எழுந்தருளிய பகவான்

வாகன சேவையில் கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
யோக நரசிம்மர் அலங்காரத்தில் வீதியுலா வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்
யோக நரசிம்மர் அலங்காரத்தில் வீதியுலா வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்
Published on

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன சேவைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை சிறிய சேஷ வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் 'வேணுகோபாலசாமி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சிம்ம வாகன சேவை
சிம்ம வாகன சேவை

இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை ஹம்ச வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று காலையில் சிம்ம வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வாகன சேவைக்கு முன்னால் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கபிலேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி திருப்பதி நகர வீதிகளில் உலா வந்த காட்சி.
கபிலேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி திருப்பதி நகர வீதிகளில் உலா வந்த காட்சி.

கபிலேஸ்வரர் கோவில்

இதேபோல் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் சூரியபிரபை வாகனத்தில் உற்சவர்களான சோமஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி திருப்பதி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வாகன வீதிஉலா முன்னால் பக்தி பஜனை, கோலாட்டங்கள் நடந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக, நாளை மறுநாள் (பிப்ரவரி 12 ஆம் தேதி) கருட சேவை நடைபெறுகிறது. பிப்ரவரி 13 ஆம் தேதி தங்கத் தேரோட்டம், பிப்ரவரி 15 ஆம் தேதி தேரோட்டம் மற்றும் பிப்ரவரி 16 ஆம் தேதி சக்கரஸ்நானம் நடைபெறும்.

பிரம்மோற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருட சேவை நாளில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Also Read
விடிய, விடிய வீதியுலா... சீர்காழி அருகே 11 பெருமாள்கள் தங்க கருட சேவை உற்சவம்
யோக நரசிம்மர் அலங்காரத்தில் வீதியுலா வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com