ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா 3-ம் நாள்... சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

அதிகாலையில் நடைபெற்ற வாகன சேவையை முன்னிட்டு விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டது.
சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீநம்பெருமாள்
சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீநம்பெருமாள்
Published on

ஸ்ரீரங்கம்,

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி காலை 9.30 மணி அளவில் வெள்ளை கோபுரம் அருகே உள்ள தேரில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் சித்திரை தேர் திருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்றது.

வாகன சேவை

விழாவையொட்டி தினமும் வாகன சேவை நடைபெறுகிறது. காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். அவ்வகையில் விழாவின் மூன்றாம் நாளான இன்று காலையில் சிம்ம வாகன சேவை நடைபெற்றது.

இதற்காக ஸ்ரீநம்பெருமாள் இன்று அதிகாலை கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக உபயங்கள் கண்டருளி, சௌகார் ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார்.

சிம்ம வாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள்
சிம்ம வாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள்

விஸ்வரூப சேவை

ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு யாளி வாகனத்தில் புறப்படும் ஸ்ரீநம்பெருமாள், சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவில் வாகன மண்டபத்திற்கு சென்று, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைகிறார். வாகன சேவையை முன்னிட்டு இன்று விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 14-ந் தேதி அதிகாலை நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com