எம பயம் போக்கும் ஆலயம்

ஸ்ரீவாஞ்சியம் ஆலயத்தில் எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில் சிறப்பு ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் பெறலாம் என்பது நம்பிக்கை.
திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் வாஞ்சிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு எமதர்மனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தெற்கு நோக்கிய சன்னதியில் எமதர்மன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார்.
எமதர்மனுக்கு வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில் இங்கு சிறப்பு ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் பெறலாம் என்பது நம்பிக்கை. யோக நிலையில் எமதர்மன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இங்கு வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி வழிபட்டால் குறைகள் நீங்கப்பெறும் என்பது நம்பிக்கை.






