

மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 திவ்விய தேசங்களில், 63வது திவ்ய தேசம் ஆகும். இங்கு தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பன்னிரு ஆழ்வார்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 16-ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று அதிகாலை விஸ்வரூப பூஜை, நித்ய பூஜைகளுடன், நாதஸ்வரம் முழங்க, கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு மங்களகிரி உற்சவங்கள் நடக்கின்றன.
அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து வாகன சேவைகள் நடக்கினற்ன. முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை 28-ம் தேதியும், தேரோட்டம் 30-ம் தேதியும் விமரிசையாக நடைபெற உள்ளது.