சிவபெருமானிடம் நாரை பெற்ற வரத்தால் பொற்றாமரைக் குளத்துக்கு கிடைத்த சிறப்பு

மதுரை ஆவணி மூலத்திருவிழாவின் இரண்டாம் நாளில், நாரைக்கு முக்தி கொடுத்த திருக்கோலத்தில் சிவபெருமான் எழுந்தருளினார்.
சிவபெருமானிடம் நாரை பெற்ற வரத்தால் பொற்றாமரைக் குளத்துக்கு கிடைத்த சிறப்பு
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா நடந்துவருகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களை உணர்த்தும் சிறப்பு அலங்காரங்கள் இவ்விழாவில் நாள்தோறும் இடம்பெறுகின்றன. அதில் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த கோலத்தில் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். மீனாட்சி அம்மன், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். சுவாமி, அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த திருவிளையாடல் குறித்த புராண வரலாறு வருமாறு:-

மதுரைக்கு தெற்கே ஒரு குளத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் மற்றொரு குளத்துக்கு சென்றது. அந்த குளத்தில் முனிவர்கள் நீராடிக்கொண்டு இருந்தனர். அதில் இருந்த மீன்கள், முனிவர்கள் மீது புரண்டு விளையாடின. அதைக்கண்ட நாரை அந்த மீன்களை பிடித்து உண்ணக்கூடாது என்று நினைத்து உண்ணாமல் இருந்தது.

அங்கிருந்த முனிவர்கள், மதுரையை பற்றியும் பொற்றாமரைகுளத்தின் சிறப்பை பற்றியும் பேசிக்கொண்டு இருந்தனர். உடனே நாரை மதுரைக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடியது. இறைவனை வணங்கி முக்தி பேறு பெற்றது. அப்போது நாரை, இறைவனிடம் பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் பறவைகள் அதனை உண்ணக்கூடும். அதனால் பாவம் வந்து சேரும். எனவே நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் பொற்றாமரைக்குளத்துக்கு வராதவாறு அருள்புரிய வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் வாங்கியது. நாரைக்கு இறைவன் அருளிய வரத்தின்படி இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்று புராணம் கூறுகிறது.

நேற்றைய விழாவின்போது இரவு 7 மணிக்கு சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com