‘‘கனி காணுதல்.. கை நீட்டம்..’’: கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் விஷு கனி காணும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள்
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் விஷு கனி காணும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள்
Published on

சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. விசுவாவசு ஆண்டு முடிவடைந்து பராபவ ஆண்டு இன்று காலை 9:30 மணி அளவில் பிறந்ததையடுத்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை முதலே பக்தர்கள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.

நாகர்கோவில்

நாகர்கோவில் கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கனி காணும் நிகழ்ச்சி தொடங்கியது. அதனை தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 6 மணிக்கு நடைபெற்ற தீபாராதனையை தொடர்ந்து கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் கை நீட்டம் வழங்கப்பட்டது.

பிற்பகல் 12 மணிக்கு அலங்காரம் அதனை தொடர்ந்து சிவபெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் பதிவு தீபாராதனை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கூடலூர் பகுதியில் சக்தி விநாயகர் கோவில்
கூடலூர் பகுதியில் சக்தி விநாயகர் கோவில்

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மாரியம்மன் கோவில், வரதராஜ பெருமாள், எல்க்ஹில் முருகன் கோவில் உள்பட சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் குன்னூர் பகுதியிலும் காலை முதல் இரவு வரை கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

கூடலூர் பகுதியில் சக்தி விநாயகர் கோவில், மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன், கூடலூர் குசுமகிரி குமர முருகன், ஓவேலி சந்தனமலை முருகன், மசினகுடி திருக்கல்யாண சுப்பிரமணிய சுவாமி, பந்தலூர், கொளப்பள்ளி பகுதியில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கை நீட்டம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கை நீட்டம்

மண்டைக்காடு

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயிலில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது.

இரணியல் அருகே உள்ள மார்த்தாண்டேஸ்வரம் மகாதேவர் கோவில் உட்பட பல கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு நெற்றியில் நாமமிட்டு கை நீட்டம் வழங்கப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி ஐயப்ப சுவாமி மற்றும் ஈரோடு சாலைப்புதூர் செந்தூர் முருகன்
திருக்காட்டுப்பள்ளி ஐயப்ப சுவாமி மற்றும் ஈரோடு சாலைப்புதூர் செந்தூர் முருகன்

திருக்காட்டுப்பள்ளி

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அக்னிஸ்வர ஸ்வாமி திருக்கோவிலில் ஸ்ரீ ஐயப்பன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சித்திரை முதல் நாளில் விஷு கனி தரிசனம் நடைபெற்றது. ஸ்ரீ ஐயப்பனுக்கு அனைத்து வகை பழங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. காலையில் அலங்காரம் முடிந்ததும் தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். மேலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி நகரில் அமைந்திருந்த சிறிய மற்றும் பெரிய கோவில்களிலும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கொடுமுடி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து பக்தர்கள் திரளாக வருகை தந்து காவிரியில் நீராடி மகுடேஸ்வரர் மற்றும் பிரம்மா, பெருமாளை வழிபட்டு சென்றனர்.

அருகிலுள்ள சாலைப்புதூர் செந்தூர் முருகன் திருக்கோவில், ஊஞ்சலூர் நாகேஸ்வரர் மற்றும் மாரியம்மன் திருக்கோவில், கொந்தளம் நாகேஸ்வரர் திருக்கோவில், கொளாநெல்லி மாம்பழங்கார சுவாமி திருக்கோவில பூங்குழலி அம்மன் திருக்கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக வந்திருந்து இறைவனை வழிபட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com