தை அமாவாசை... முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்

பூம்புகார் சங்கமத்துறையில் குவிந்த மக்கள்
தை அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் வருடம் முழுக்க முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்ததற்கு சமம் என்பது நம்பிக்கை.
அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியைப் பெறக்கூடிய அற்புத நாள். மாதந்தோறும் அமாவாசை வரும். அதுவே முன்னோர்களை வணங்குவதற்கு உண்டான நாள்தான். குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் புனித நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவது மக்களின் வழக்கம். இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதிலும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்ற அமாவாசையில் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் தை அமாவாசையில் செய்தால் வருடம் முழுக்க அமாவாசை தினத்தில் படையல் வைத்ததற்கு சமம் என்பது நம்பிக்கை.
அவ்வகையில் தை அமாவாசை நாளான இன்று புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
கன்னியாகுமரி
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் கன்னியாகுமரியில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்தனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, திருவையாறு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பூம்புகார் சங்கமத்துறை
காவேரி நதியானது குடகு மலையில் தோன்றி மயிலாடுதுறை மாவட்டம், காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவேரி பூம்பட்டினம் என அழைக்கப்பட்ட பூம்புகாரில் சங்கமத்துறையில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்கு சென்ற பலன் கிடைப்பதாக காவேரி புராணம் என்ற நூல் கூறுகிறது. இன்று தை அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் காவேரி கடலோடு சங்கமிக்கும் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தனது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மேலும் சுமங்கலி பெண்கள் காவிரி நதியில் மங்களப் பொருட்களை இட்டு வழிபாடு நடத்தினார்கள்.
குற்றாலம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அதிகாலை முதலிலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.
மாமல்லபுரம் கடற்கரை மற்றும் தலசயன பெருமாள் கோயில் திருக்குளம் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து வந்து ஏராளமானோர் தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
மோகனூர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படித்துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.
இதற்காக சிவாச்சாரியார்கள் பக்தர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு முன் தலைவாழை இலை போட்டு அந்த இலையில் அகத்திக்கீரை, பழம், பூ, புனிதநீர், எள், அரிசிமாவு மற்றும் கடலை கலந்த உருண்டை மற்றும் பல்வேறு பொருட்களை வைத்து வேத மந்திரம் ஓதினர்.
தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றின் தண்ணீரில் நடுப்பகுதிக்கு சென்று தர்ப்பணம் செய்த பொருட்களை இலையுன் விட்டு புனித நீராடினர். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.
இதில் நாமக்கல், வளையபட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம், மல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் காவிரி ஆற்றுப் படுகையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது.
அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மோகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றிலும் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.






