பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா: 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

தைப்பூச திருவிழா வருகிற 26-ந்தேதி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) உபகோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று காப்புக்கட்டு நடக்கிறது.

அதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடக்கிறது. பின்னர் காலை 9.50 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.

தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழாவின் 6-ம் நாளான 31-ந்தேதி இரவு 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.

மறுநாள் பிப்ரவரி 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 4-ந்தேதி தெப்பத்தேர் உற்சவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் வருகிற 31-ந்தேதி, பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு அனைத்து வழிகளும் இலவசமாக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com