தைப்பூச திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் தைப்பூச விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நாளை நடைபெறும்.
தைப்பூச திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரோட்டம்
Published on

மதுரை:

முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு இன்று காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்ட சுவாமி-அம்பாள், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பக்குளக்கரையில் எழுந்தருளினர். அங்கு சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

“திருப்பரங்குன்றம் தைப்பூச விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நாளை (28.1.2025) நடைபெறும்”

தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் சுவாமி எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘அரோகரா’ கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக, ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள திருக்குளத்தில் நாளை தெப்ப உற்சவம் நடைபெறும். அலங்கரிக்கப்பட்டுள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் எழுந்தருளி, தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com