தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; நாளை தேரோட்டம்

பக்தர்கள் வசதிக்காகவும், தேரில் வரும் சுவாமிக்கு தேங்காய், பழம் படைப்பதற்காகவும் 14 இடங்களில் தேர் நின்று செல்லும்.
தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; நாளை தேரோட்டம்
Published on

தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் தஞ்சை பெரியகோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டின் சித்திரை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றன. மேலும் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி, தேரில் கடந்த 15-ந் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தேருக்கு வார்னிஷ் வர்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 19 அடி உயரம் கொண்ட தேர், அலங்காரத்தின் மூலம் மொத்தம் 50 அடி உயரத்தை எட்டியுள்ளது. சாதாரண மாக 40 டன் எடை கொண்ட இந்த தேர் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயர்ந்துள்ளது.

பெரியகோவிலில் நாளை அதிகாலை 5 மணிக்குள் தியாகராஜர், ஸ்கந்தர், கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற உள்ளது. தேரில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருளிய பின்னர், காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்பட உள்ளது.

இதனிடையே, பக்தர்கள் வசதிக்காகவும், தேரில் வரும் சுவாமிக்கு தேங்காய், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில் சந்து மாரியம்மன் கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், மூலை ஆஞ்சநேயர் கோவில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோவில், ரத்தினபுரீஸ்வரர் கோவில், குருகுல சஞ்சீவி கோவில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோவில், மணிகர்ணிகேஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், கனரா வங்கி பிள்ளையார் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காளியம்மன் கோவில் ஆகிய 14 இடங்களில் தேர் நின்று செல்லும்.

மேல வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்படும் தேர் மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக நிலையை சென்று சேரும். மாலையில் தேர் மண்டபத்தில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள் புறப்பட்டு, கோவிலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com