தஞ்சை: பூக்கொல்லை ஆதிசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் பூக்கொல்லை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம், பூக்கொல்லை கிராமத்தில் ஆதிசக்தி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பூக்கொல்லையில் ஆதிசக்திவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள பூக்கொல்லையில் ஆதிசக்தி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18 ம்தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மஹா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து முளைப்பாரி மற்றும் பூத்தட்டு ஊர்வலம் எடுத்து வரப்பட்டது. 19 ம்தேதி வெள்ளிக்கிழமை முதல் கால யாக பூஜையாக விக்னேஷ்வர பூஜை, ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று சனிக்கிழமை இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையாக விமான கலச ஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், பூர்ணாஹுதி தீபாராதனை, பதினெண் வகைக் கிரியைகள், விமான கலசம் நிறுவுதல், மூலவர் பிரதிஷ்டை, இயந்திரங்கள் எண்வகை மருந்து சாத்துதல் (அஷ்டபந்தனம்) நடைபெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக பூஜையாக பூர்ணாஹூதி தீபாராதனைகள் கஜ அஸ்வ-கோ பூஜைகள், பிம்பம் சுத்தி - நாடி சந்தானம், மூலாயப் பிரவேசம், நிறை அவி அளித்தல் - சங்கல்பம், பூர்ணாஹுதி நிறைவுற்று 10.30 மணியளவில் கும்ப கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் பூக்கொல்லை, வாத்தலைக்காடு, நாடாகாடு, கழனிக்கோட்டை, முடச்சிக்காடு, குருவிக்கரம்பை, நாட்டாணிக்கோட்டை, கலைஞர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com