

நெல்லை,
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று கால்நாட்டுடன் தொடங்கியது. வரும் 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில், இன்று மூலவர் சொரிமுத்து அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மேளதாளங்கள் முழங்க கால்நாட்டு விழா நடைபெற்றதை தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.