திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 28-ந்தேதி நடக்க இருக்கிறது.
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

திருத்தணி,

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கிடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா நேற்று இரவு கோவில் வளாகத்தில் விநாயகர் உலாவுடன் தொடங்கியது. இதையடுத்து இன்று காலை 4.30 மணி முதல் 6.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் எதிரே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவ பெருமானுக்கு தீபாராதனை நடந்தது. அதன் பிறகு வள்ளி, தெய்வானையுடன் முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்தார். விழாவில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் பொது வழியில் 3 மணி நேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மரத்தேர் திருவிழா வருகிற 27-ந்தேதியும், 28-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணமும் நடக்க இருக்கிறது. 30-ந்தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் சித்திரை பெருவிழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com