ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 8 நாட்கள் திறந்திருக்கும் சொர்க்கவாசல்

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு நடப்பதுதான் மிகவும் சிறப்பானதாக உள்ளது.
திருச்சி,
வைணவ தலங்களில் உள்ள பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக சென்றால் பாவங்கள் தீர்ந்து, மோட்சத்தை அதாவது சொர்க்கத்தை அடையலாம் என்று ஐதீகமாக நம்பப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெருமாள் கோவில்களிலும், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழாவில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தாலும் ஸ்ரீரங்கத்தில் நடப்பதுதான் மிகவும் சிறப்பானதாக உள்ளது. இதற்கு காரணம் இந்த தலத்தில் தான் பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான நம்மாழ்வாருக்கு மகாவிஷ்ணு மோட்சம் வழங்கி உள்ளார். அதன் பின்னரே இந்த நிகழ்வு மற்ற தலங்களில் பின்பற்றப்பட்டு உள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு திறக்கப்பட்ட பரமபதவாசல் இரவு 10 மணி வரை திறந்து இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரமபதவாசல் வாசல் வழியாக சென்றனர். ஜனவரி 8-ந் தேதி வரை பரமபதவாசல் கதவுகள் திறந்திருக்கும். இதில் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 4-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் கதவுகள் திறந்திருக்கும்.
ராப்பத்து உற்சவத்தின் எட்டாவது நாளான 6.1.2026 அன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறும் என்பதால், அன்றைய தினம் பரமபதவாசல் கதவுகள் திறக்கப்படாது. 9-ம் நாள் அதாவது 7-ந் தேதி மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 10-ம் நாள் (8-ந் தேதி) காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் பரமபதவாசல் கதவுகள் திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.






