

ஒருவருடைய வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். தவறான பாதையில் சென்றவரைக்கூட இறைநம்பிக்கை நல்வழிப்படுத்தி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு மகரிஷி வால்மீகியின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
ஒரு காலத்தில் காட்டில் வழிப்பறி செய்து வாழ்ந்தவர், பின்னர் தன் தவறுகளை உணர்ந்து, இறைவனின் நாமத்தைச் சொல்லி, கடும் தவத்தில் ஈடுபட்டு, அதன் பயனாக மகரிஷியாக உயர்ந்து, உலகப் புகழ்பெற்ற ராமாயணத்தை இயற்றியவராக திகழ்ந்தார்.
வால்மீமியின் இயற்பெயர் ரத்னாகரன் என்பதாகும். காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்த அவர், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த வழியாகச் செல்பவர்களிடம் வழிப்பறி செய்தும், கொள்ளையடித்தும் வந்தார். ஒருநாள், அவ்வழியாக நாரத மகரிஷி சென்றுகொண்டிருந்தபோது, ரத்னாகரன் அவரை வழிமறித்து, அவரிடம் இருந்த பொருட்களைத் தருமாறு கேட்டார். அப்போது நாரதர், “நீ செய்யும் இந்தப் பாவச் செயல்கள் அனைத்தும் உன் குடும்பத்திற்காகத்தானே? அவற்றால் ஏற்படும் பாவத்தில் உன் குடும்பத்தினர் பங்கு கொள்வார்களா?” என்று கேட்டார்.
அதற்கு ரத்னாகரன், “என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத்தானே இதை செய்கிறேன். எனவே, அவர்கள் நிச்சயம் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறினார். அப்போது நாரதர், “அப்படியானால் நீ வீட்டிற்குச் சென்று உன் குடும்பத்தினரிடம் இதைக் கேட்டு வா" என்றார்.
ரத்னாகரன் தனது குடும்பத்தினரிடம் சென்று, “உங்களைக் காப்பாற்றுவதற்காக நான் செய்யும் இந்தப் பாவச் செயல்களில் நீங்களும் பங்குகொள்வீர்களா?” என்று கேட்டார். அதற்கு குடும்பத்தினர், “உன்னை நம்பி இருக்கும் எங்களை காப்பாற்றுவது உன்னுடைய கடமை. அதற்காக நீ செய்யும் பாவச் செயல்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அந்தப் பாவத்தின் விளைவுகளை நீயே ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினர்.
இதைக் கேட்டு ரத்னாகரன் அதிர்ச்சியடைந்தார். "யாருக்காக இவ்வளவு பாவங்களை செய்கிறேனோ, அவர்களே அந்த பாவங்களில் பங்குகொள்ள மறுக்கின்றார்களே” என்று எண்ணி மனம் வருந்தினார். பின்னர் நாரத மகரிஷியை சந்தித்து, தன்னை நல்வழிப்படுத்துமாறு வேண்டிக் கொண்டார்.
ரத்னாகரனின் மனமாற்றத்தை உணர்ந்த நாரத மகரிஷி, அவருக்கு இறைவனின் நாமத்தை ஜெபித்து மனதைத் தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தினார். பகவான் ராமரின் திருநாமமான “ராம” என்பதை தொடர்ந்து உச்சரிக்குமாறு கூறினார். ஆனால், நீண்ட காலமாக தவறான வாழ்க்கை வாழ்ந்து வந்த ரத்னாகரனால் "ராம" என்ற இறைநாமத்தை உச்சரிக்க முடியவில்லை.
இதனால் நாரதர், “மரா, மரா, மரா” என்று தொடர்ந்து சொல்லுமாறு அவரிடம் கூறினார். ரத்னாகரனும் அதையே இடைவிடாமல் உச்சரிக்கத் தொடங்கினார். தொடர்ந்து வேகமாக உச்சரித்தபோது, “மரா, மரா, மரா..." என்ற சொல் இயல்பாகவே “ராம, ராம, ராம..." என்று மாறியது. இவ்வாறு அறியாமலேயே ராம நாமத்தை தொடர்ந்து ஜெபித்த ரத்னாகரன், இறைவனை நினைத்தபடி ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்தார்.
தவத்தில் முழுமையாக மூழ்கியிருந்ததால், தன்னைச் சுற்றி எறும்புகள் புற்று கட்டியதைக்கூட அவர் உணரவில்லை. காலப்போக்கில் அவரது உடலைச் சுற்றிலும் பெரிய எறும்புப் புற்று உருவானது. பின்னர் தவம் நிறைவடைந்ததும், அந்தப் புற்றிலிருந்து ரத்னாகரன் வெளியே வந்தார். இதன் காரணமாகவே அவருக்கு 'வால்மீகி' என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 'வால்மீகம்' என்பது எறும்புப் புற்றைக் குறிக்கும் சொல்லாகும்.
தவத்தின் மூலம் ஞானமும், ஆன்மிகத் தெளிவும் பெற்ற வால்மீகி, பின்னர் மகரிஷியாக உயர்ந்து, பகவான் ராமரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் உலகப் புகழ்பெற்ற ராமாயணத்தை இயற்றினார். இவ்வாறு, ஒருகாலத்தில் தவறான பாதையில் சென்ற ரத்னாகரன், மனமாற்றம், இறைநாம ஜெபம் மற்றும் தவத்தின் மூலம் மகரிஷி வால்மீகியாக உயர்ந்தார்.
வால்மீகியின் வாழ்க்கை உணர்த்துவது என்னவென்றால், மனிதன் எத்தகைய நிலையில் இருந்தாலும், உண்மையான மனமாற்றத்துடன் நல்வழியைத் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும். செய்த தவறுகளை நினைத்து வருந்துவதை விட, திருந்தி நல்ல வழியில் நடப்பதே முக்திக்கு வழி.