

திருப்பரங்குன்றம்,
காலங்காலமாக பின்பற்றி வந்த மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அடிப்படையில் மூலவர் சிரசுக்கு நேர் மேல் உள்ள இடமான உச்சிப் பிள்ளையர் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச்சடங்குகள் மற்றம் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பராம்பரியப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, திருக்கோவிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. இத்தகைய நீண்ட காலந்தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் (Age Old Continued Practices) சமய மரபுகள் மற்றும் சடங்குகள் (Custom and Rituals), ஆகம விதிகள் (Agama rules) ஆகியவை திருக்கோவிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
எனவே, நமது திருக்கோவிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலை பெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும், அதைத்தொடர்ந்து திருக்கோவில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும், இத்திருக்கோவில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேற்கண்ட அறங்காவலர்குழு தீர்மானத்தின்படி இத்திருக்கோவில் திருக்கார்த்திகை மகாதீபமானது, இத்திருக்கோவில் மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான, மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் இன்று 24.11.2026 மாலை 6 மணியளவில் ஏற்றப்பட்டது என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.